tamilnadu

img

17 சாதிகளை எஸ்.சி. பட்டியலில் இணைப்பதா? உ.பி. பாஜக அரசின் உத்தரவுக்கு அலகாபாத் நீதிமன்றம் தடை!

அலகாபாத்:
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த (ஓபிசி) 17 சாதிகளை, பட்டியல் வகுப்பில் (எஸ்.சி. பட்டியலில்) இணைக்கும், உத்தரப்பிரதேச பாஜக அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், இவ்வழக்கில், உத்தரப்பிரதேச சமூகநலத்துறை முதன்மை செயலாளர் மனோஜ் குமார் சிங், பதிலளிக்கவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின்கீழ் வரும் 17 சாதிகளை, திடீரென எஸ்.சி.பட்டியலில் சேர்த்து, உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத், கடந்த ஜூன் 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அப்போதே இதற்கு பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. சமூக சேவகர் கோரக் பிரசாத் என்பவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்நிலையில், கோரக் பிரசாத்தின் மனுவை, நீதிபதிகள் சுதிர் அகர்வால் மற்றும் ராஜீவ் மிஸ்ரா ஆகியோர் விசாரித்தனர்.

அப்பொழுது, “ஆதித்யநாத் அரசாங்கத்தின் முடிவு தவறானது; இதுபோன்ற முடிவுகளை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று கூறிய நீதிபதிகள், “இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால், அது நாட்டின் நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும்; நாடாளுமன்றத்தில் தேவையான நடைமுறைகளை பின்பற்றிய பின்னரே, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் வகை குறித்து முடிவு எடுக்க முடியும்; ஒரு மாநில அரசு உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலம் அத்தகைய முடிவை எடுக்க முடியாது”என்று குறிப்பிட்டனர். மேலும், இதனடிப்படையில், ஆதித்யநாத் உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதிகள், உத்தரப்பிரதேச அரசு இவ்விஷயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

;